ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்... தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுநர் இல்லா ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2025ஆம் ஆண்டுக்குள் 25க்கு மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி விடும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரயில் பாதையில் தானியங்கி வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் மெஜன்டா லைன் எனப்படும் ஜனக்பூர் முதல் நொய்டா தாவரவியல் பூங்கா வரையிலான பாதையில் இயக்கப்படுகிறது.
தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டையையும் வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் இயக்கம் அதிநவீன வசதிகளோடு நாடு முன்னேறி வருவதைக் காட்டுவதாகத் தெரிவித்தார். முதல் மெட்ரோ ரயிலை வாஜ்பாய் தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்த அவர், 2014ஆம் ஆண்டில் தாம் ஆட்சிக்கு வந்தபோது 5 நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வந்ததாகவும், இப்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் 25க்கு மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும் என்றும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் சேவைகளை விரிவாக்க அதற்கான எந்திரங்களை இந்தியாவில் தயாரிப்பது மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இதனால் செலவு குறைந்து, அந்நியச் செலாவணி மீதமாவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments