காடு வளர்க்கும் பட்டதாரி.. கை கொடுக்கும் மாவட்ட நிர்வாகம்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இறந்துபோன அண்ணனின் நினைவாக மரங்கள் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞரிடம் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை காடு வளர்ப்புக்காக ஒப்படைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
வேலூர் மாவட்டம் உள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற பட்டதாரி இளைஞர், சென்னையில் சினிமா உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த்தின் அண்ணன் விபத்தில் உயிரிழந்துவிடவே, வயதான தாய் தந்தையை கவனித்துக் கொள்வதற்காக சொந்த ஊர் திரும்பினார். இறந்துபோன அண்ணனின் நினைவாக ஊரைச் சுற்றி ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்துள்ளார் ஸ்ரீகாந்த்.
உள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கரில் பசுமையான காடு ஒன்று இருந்துள்ளது. காலப்போக்கில் ஆக்கிமிப்பாளர்களின் கைகளில் சிக்கி அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு, தற்போது மணல் சுரண்டி எடுக்கும் இடமாக மாறி நிற்கிறது. அங்கு வசித்து வந்த ஏராளமான உயிரினங்களும் இடம்பெயர்ந்துவிட்டன.
இந்த நிலையில், அண்ணன் நினைவாக மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வந்த ஸ்ரீகாந்தின் செயலைப் பார்த்த மாவட்ட நிர்வாகம் அவரை நேரில் அழைத்துப் பாராட்டி, அழிந்துபோன காட்டை மீட்டுருவாக்கம் செய்யுமாறு கூறியுள்ளது. உற்சாகத்தோடு ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த், அந்த இடத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
இந்த காடு வளர்ப்புக்காக 13 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 30 ஆட்களையும் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் ஜெயித்திருந்தால் கூட கிடைக்காத மன திருப்தி இந்த காடு வளர்ப்பில் கிடைப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீகாந்த்.
Comments