வண்டு முருகன் பாணியில் சவால் விட்ட திமுக பிரமுகர் வீடு சூறை..!

0 28051
வண்டு முருகன் பாணியில் சவால் விட்ட திமுக பிரமுகர் வீடு சூறை..!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நடந்த திமுக கூட்டத்தில் தனது ஊருக்கு வரமுடியுமா ? என்று மாற்றுக் கட்சியினருக்கு சவால் விட்டு பேசிய திமுக பிரமுகரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரது காரை அடித்து நொறுக்கி முட்டைகளை வீசி வீட்டை நாசம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது..

அரசியல் மேடையில் அட்டகாசமாக சவால் விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் வக்கீல் வண்டு முருகன் காமெடியைப் போல ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அடுத்த உமரிக்காட்டை சேர்ந்தவர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர். இவர் திமுகவின் மாநில மாணவரணி துணை செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ஆறுமுக நேரியில் நடந்த திமுகவின் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய உமரிசங்கர், மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சித்துள்ளார். யாருக்காவது தைரியமிருந்தால் தனது ஊருக்கு வந்து பார்க்குமாறு சவால் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் 3 இரு சக்கர வாகனங்களில் உமரிசங்கரின் வீட்டிற்கு சென்ற 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் கார் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, அருகில் நின்றிருந்த பைக்கையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்தோடில்லாமல் அவர் கார் முழுவதும் முட்டையை வீசி நாசம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வீட்டிற்கு சென்ற உமரிசங்கர் தனது கார் அடித்து நொறுக்கப்பட்டது குறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பங்களா போன்று வீடு கட்டியுள்ள உமரிசங்கர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தாததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி திமுகவில் உள்ள கோஷ்டி பூசலில் உமரி சங்கர் ஒரு தரப்புக்கு நெருக்கமானவராக இருப்பதால், உட்கட்சி விவகாரமா ? அல்லது கிராம சபை கூட்டத்தில் விட்ட சவாலுக்கு கிடைத்த அடியா ? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments