அறியாத பருவத்தில் காதல் திருமணம் - கசந்துபோன திருமணத்தால் பலியான கைக் குழந்தை!

0 52368

ரிய பக்குவத்தையும் உரிய வயதையும் எட்டுவதற்கு முன்பே, அறியாத வயதில் காதல் திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதியரின் தகராறில் மூன்று மாத குழந்தை பலியான சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இறப்புக்குக் காரணமான தன் கணவனைக் கைதுசெய்ய வேண்டும் என்று மனைவி போராட்டம் நடத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணலிங்கம் - முத்துமணி தம்பதி. தற்போது லட்சுமண லிங்கத்துக்கு 19 வயதும் முத்துமணிக்கு 18 வயதும் ஆகும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கிருஷ்ணலிங்கம் கதிஷ் என்று பெயர்.

இவர்கள் இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். அங்கு கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் முத்துமணி நடத்தையின் மீது சந்தேகம் கொண்ட லட்சுமணலிங்கம் ஓயாது சண்டை போட்டுள்ளார். மேலும், வரதட்சணை கேட்டும் மனைவியைத் துன்புறுத்தியுள்ளார். இதனால், முத்துமணி கிளாக் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், டிசம்பர் 24 ம் தேதி கிளாக்குளத்திற்கு வந்து முத்துமணியிடமும் அவரது காதல் கணவர் லட்சுமணலிங்கம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, லட்சுமண லிங்கம் தாக்கியதில் மனைவி முத்துமணிக்கும் அவர்களது மூன்று மாத குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூன்று மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து, லட்சுமண லிங்கம் மற்றும் அவரது தந்தை பெரியசாமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மூன்று மாத குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து முத்துமணியும் அவரது உறவினர்களும் கிளாக்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு, 3 மாத குழந்தை கிருஷ்ணலிங்கம் கதிஷின் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

காதலால் கவரப்பட்டு, அறியாத பருவமான பதினாறு வயதில் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தேகம் மற்றும் வரதட்சணை கொடுமையால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதில் 3 மாத குழந்தை பலியானது கிளாக்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments