டெல்லி : இந்தியாவில் முதல் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்... மக்கள் உற்சாகம்

0 1511

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் டிச.28-ம் தேதியான நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் நகர்ப்புற மக்களின் முக்கிய போக்குவரத்து அம்சமாக மெட்ரோ ரயில்கள் இருந்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவையை தினமும் ஆயிரகணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், மெட்ரோ ரயில் சேவையின் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இத்தகைய ரயில் சேவை டெல்லியில் மெஜந்தா நிற லைன் மார்க்கத்தில் இருந்து தாவரவியல் பூங்கா வரையில் இருக்கும். 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன் மார்க்கம் மற்றும் பிங்க் நிற லைன் மார்க்கத்திலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மக்கள் அதிகம் பயணிக்காத நேரங்களில் சோதனை அடிப்படையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. அதேபோல சிக்னல் செயல்பாடுகளை நிபுணர் குழு ஆராய்ந்தது. மேலும் இத்தகைய ரயில் இயக்கத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை எப்படி அணுகுவது என்பது குறித்தும் சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த சேவையுடன் தேசிய பொது போக்குவரத்து அட்டையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது.

இந்த அட்டை மூலம் பேருந்து பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி பணத்தையும் கூட ஏடிஎம்களில் எடுத்தும் கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல், டெல்லி மெட்ரோ தொழில்நுட்ப அளவில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. தற்போதைய இந்த ‘டிரைவர்லெஸ்’ முறைக்கு மாறுவது கடந்த 18 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் மாற்றங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இருந்த விதிகள் ஆளில்லா சேவகளை அனுமதிக்கவில்லை. இதனால், மெட்ரோ ரயில்வே பொது விதிகள் 2020ல் மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்குள் டெல்லி மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் இந்தவித சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது. டிரைவர் இல்ல மெட்ரோ ரயிலில் பயணிப்பதன் மூலம், புதுவித அனுபவத்தை பெற, டெல்லி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments