புதுச்சேரியில் ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை? -பிரதமர் கேள்வி

புதுச்சேரியில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தாமதம் செய்து, தமக்கு ஜனநாயகம் குறித்து டெல்லியில் பாடம் நடத்துவதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆறு லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் வகையில் அனைவருக்குமான ஆயுஷ்மன் மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மிகவும் நியாயமாக நடைபெற்றதை சுட்டிக் காட்டினார்.
ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தமக்கு ஜனநாயகம் குறித்து பாடம் நடத்துவதாக கூறிய மோடி, காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்கூட தேர்தலை நடத்த விடாமல் தாமதப்படுத்துவதாக விமர்சித்தார்.
ஆயுஷ்மன் திட்டம் காஷ்மீர் மக்கள் அனைவருக்குமான திட்டம் என்று கூறிய மோடி வளர்ச்சிப் பாதையை நோக்கி காஷ்மீர் மக்கள் திரும்பி விட்டதாக கூறினார்.
Comments