"லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற" அரசியல் அமாவாசை கைது..!

0 6231
"லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற" அரசியல் அமாவாசை கைது..!

சேலத்தில் லஞ்ச பணத்துடன் போலீசாரிடம் சிக்கிய சார்பதிவாளரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே, லஞ்சம் கொடுப்பதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பெற்ற அமாவாசை என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆப்பசைத்த குரங்கு போல லஞ்ச ஒழிப்பு போலீசிடம் லஞ்சம் கொடுக்க முயன்று போலீசிடம் சிக்கினார் அரசியல் பிரமுகர் அம்மாசி..!

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் ஜாகீர் அம்மாப் பாளையம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ். சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்துடன் கனகராஜ் சிக்கிக் கொண்டார்.

இதுதொடர்பாக சார் பதிவாளர் கனகராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கவும், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பேசி துறை ரீதியான நடவடிக்கை மட்டும் மேற்கொள்ள உதவுவதாக கூறி சேலம் ரெட்டிப்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரும், சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான அம்மாசி, சார்பதிவாளர் கனகராஜிடம் பேரம் பேசியுள்ளார்.

இதற்கு முதலில் ஒப்புக்கொண்டு பிறகு பணம் தர விருப்பம் இல்லாத சார்பதிவாளர் கனகராஜ், இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் அரசியல் பிரமுகர் அம்மாசியின் பேரம் குறித்து போட்டுக் கொடுத்தார்.

போலீசார் அறிவுரையின்படி கனகராஜ், சனிக்கிழமை இரவு சேலம் அழகாபுரம் பகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை புரோக்கர் அம்மாசியிடம் வழங்கினார். கனகராஜிடம் இருந்து அம்மாசி பணத்தை பெற்ற போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக அம்மாசியை பிடித்தனர். கைது செய்யப்பட்ட அம்மாசியை சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்

கடந்த சில மாதங்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் கையூட்டு பெறும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக உக்கிரமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பெயரிலேயே லஞ்சம் பெற முயன்றால் சும்மா விடுவர்களா என்ன ? அதுதான் அரசியல் அமாவாசையை பிடித்து ஜெயிலில் அடைத்து விட்டனர் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments