ஆர்டரின் பேரில் தரமான காற்று பாட்டிலில் அடைத்து தரப்படும்! காற்று விற்பனைக்கு

0 5228
https://www.youtube.com/watch?v=IIO9foprRE0

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

பஞ்ச பூதங்களாகக் கருதப்படுவது நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம். இவற்றில் ஆகாயத்தை தவிர மற்ற அனைத்தும் தற்போது விற்பனைக்கு வந்து விட்டது. பெரும்பாலான நீர் நிலைகள் மாசுபட்டுவிட்டதால், ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகிவருகிறோம். தண்ணீர் மாசு, காற்று மாசு என்ற செய்திகள் நமக்குப் புதிதல்ல. அதிகரித்த காற்று மாசுபாட்டால், டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அங்குள்ள மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசித்து பல்வேறு வித நோய்களின் பிடியில் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் பிரபல வலைத்தளம் 'My Baggage'. சரக்குகளை ஒரு இடத்தில் வாங்கி மற்றொரு இடத்தில் டெலிவெரி செய்யும் பணியை இந்த வலைத்தளம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போது ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் தரமான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியுள்ளது.

’My Baggage’ நிறுவனம் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாட்டிலில் காற்றை நிரப்பி விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகிறது. இந்த ’பாட்டில் காற்று’ பல்வேறு ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது. அதாவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து என பல இடங்களிலுள்ள காற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதில் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப மக்கள் ஆர்டர் செய்யலாம். எந்த பகுதியை சேர்ந்த காற்று வேண்டுமோ அதனை வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் வாங்கிக் கொள்கிறார்கள். 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை, இந்திய மதிப்பில் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த காற்று பாட்டில்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து மக்களால் அதிகம் வாங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த நிறுவனத்திடம் சிறப்புக் கோரிக்கை வைத்தால் அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் விற்பனை செய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது அறிய வாய்ப்பு என்றும் அந்த நிறுவனம் விளம்பரபடுத்தி வருகிறது.

பாட்டிலில் அடைத்து காற்று விற்பனை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டே சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் மலை பிரேதசங்களில் கிடைக்கும் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது காற்று விற்பனை முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது காற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் என்னவெல்லாம் விற்பனைக்கு வரப்போகிறதோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments