'ரோஸியும் எங்கள் குடும்பத்தில் ஒருவள்தான்!'- செல்லப்பிராணிக்கு காரியம் செய்த குடும்பம்

விழுப்புரத்தில் கடந்த 7 வருடங்களாக வளர்த்து வந்த நாய் உயிரிழந்ததால் விரதமிருந்து துக்கம் அனுசரித்து, 15 ஆம் நாள் காரியம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொம்மைகள் எத்தனை இருந்தாலும், செல்லப் பிராணிகளிடம் உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. செல்லப் பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல்நலம், மனநலத்துக்கும் நல்லது.
விலங்குகளின் உலகம் மிகவும் சிறியது. அதிலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம் நேசிப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும் எதிர்பார்க்கும். செல்லப்பிராணியான நாய்கள், தனக்கு உணவு அளிப்பவர்களிடம் காட்டும் மரியாதையும் அன்பும் தனி ரகம்.
விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சபரிநாதன். இவரது மனைவி மங்கையர்கரசி. இந்த தம்பதியினர் நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். இதனால், இவர்கள் ரோசி என்ற நாய் ஒன்றை கடந்த ஏழு ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரோசி இறந்து போனது. இதனையடுத்து , குடும்பத்தினர் உயிரிழந்த ரோசிக்கு கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர். பின்னர் வீட்டில் மனிதர்கள் இறந்தால் எப்படி துக்கம் அனுசரிப்பார்களோ அதுபோல அசைவம் சமைக்காமல் விரதம் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 15 ஆம் நாளான நேற்று, ரோசிக்கு போஸ்டர் அடித்து துக்கம் அனுசரித்தனர். இந்த, போஸ்டர்கள் கீழ்பெரும்பாக்கம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டன. மேலும் ரோசி இறந்து 15 ஆவது நாள் என்பதால் ரோசியின் புகைபடத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Comments