வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலம்

0 2721
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  இன்று அதிகாலையில் நடைபெற்றது.கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிகாலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். ரத்தின அங்கி, வைர பூணூல், கிளி மாலையுடன் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சென்று அருள்பாலித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் நாராயணா நாராயணா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

இன்று இரவு வரை நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

கொரோனாவைத் தடுக்கும் வகையில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் இன்று நாள் முழுவதும் பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு,சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நள்ளிரவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

அதிகாலையில் கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்த பெருமாள், சொர்க்கவாசல் வாயிலில் காத்திருந்த நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.

இந்த வைபவத்தை தொடர்ந்து வெங்கடகிருஷ்ணன் பார்த்தசாரதி ஆனந்த விமானத்தில் எழுந்தருளினார்.

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments