'ஒவ்வொருவருக்கும் தரமான உணவு!' கவுதம் கம்பீரின் ஒரே 1 ரூபாய் உணவு திட்டம் தொடக்கம்

0 9776

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தன் கிழக்கு டெல்லி தொகுதியில் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் ஜன ரசோய் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி - யாகவும் மாறி விட்டார். முழு நேர அரசியல்வாதியாகி விட்ட கம்பீர், இப்போது தொகுதியில் பல்வேறு நலத்திட்டப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்,ஒரு பகுதியாக தன் தொகுதி மக்களுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தை சமையல் கூடமாக கவுதம் கம்பீர் மாற்றியுள்ளார்.

நவீன வசதிகளுடன் இந்த சமையற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேன்டீனில் ஒரே சமயத்தில் 100 பேர் வரை அமர்ந்து உணவு அருந்த முடியும். தற்போது, கொரோனா காரணமாக 50 பேர் மட்டுமே ஒரே சமயத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மதிய உணவாக அரிசி சோறு, பருப்பு, காய்கறிகள் வழங்கப்படும். மதிய உணவுக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வழங்கப்படும். இந்த மதிய உணவு திட்டம் முற்றிலும் கவுதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. எந்த விதமான அரசு உதவியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக . ஜனவரி 26 ஆம் தேதியன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி அசோக் நகரிலும் இதே போன்ற கேன்டீனை திறக்க கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தெருவோரத்தில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு இரு வேளை கூட உணவு சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர். தலைநகர் டெல்லியில் குறைந்த செலவில் மக்களுக்கு உணவு வழங்க கேன்டீன்கள் இல்லை. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை பெற வேண்டும். லாக்டௌன் காலத்தில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில்தான் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களும் நல்ல ஆரோக்கியமான உணவு குடிநீர் வசதியை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தன் கிழக்கு டெல்லி தொகுதியில் இது போன்று 10 கேன்டீன்களை திறக்க கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments