300 சவரன் வழிப்பறி.. போலீஸ் திருடன்ஸ் கைது..! 3 வருடத்தில் கிரிமினலான பின்னணி

0 3219
300 சவரன் வழிப்பறி.. போலீஸ் திருடன்ஸ் கைது..! 3 வருடத்தில் கிரிமினலான பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் 300 சவரன் நகைகளை வழிப்பறி செய்த வழக்கில், 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 10 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் பணிக்கு சேர்ந்து 3 ஆண்டுகளில் கொள்ளையர்களுடன் நேரடியாகக் கூட்டணி வைத்த போலீஸ் கொள்ளையர்களின் குற்றப் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருவள்ளூர் மசூதி தெருவில் கீதாஞ்சலி நகை மாளிகை என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருபவர் மகேந்திரன். தங்க கட்டிகளை வாங்கி நகையாக தயாரித்து ஸ்ரீபெரும்புதூர் , சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

கடந்த 11ந் தேதியன்று நகைகளை கடைக்களுக்கு கொடுத்து விட்டு திருவள்ளூரில் இருந்து மகேந்திரன், ஆசிப், உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். மாம்பாக்கம் செயிண்ட் கோபின் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவரது ஆட்டோவை மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து கத்திமுனையில் சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து விசாரிக்க, ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலர் களாக பணியாற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த மேல் மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழ் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த எல்லாபுரம் பகுதியை சேர்ந்த கதிர் என்ற இரண்டாம் நிலை காவலர்கள் இரண்டு பேர் உட்பட 10 கொள்ளையர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.

தமிழ் மற்றும் கதிர் ஆகிய இரு போலீஸ் காரர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் காவல் பணிக்கு சேர்ந்துள்ளனர். சிறையில் இருந்து கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் பணிக்கு சென்ற போது வழிப்பறி கொள்ளையர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களில் ஒருவன், போலீசில் ஆயூசுக்கும் கொடுக்கும் சம்பளத்தை ஒரே நாளில் சம்பாதிக்க தங்களிடம் புது டெக்னிக் இருப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளான்.

முறையாக கணக்கு வைத்திருக்காத நகைகடை அதிபர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து நகை பணம் கொள்ளையடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள், நாம் அந்த நகை மற்றும் பணத்துடன் சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று தூண்டியுள்ளனர்.

சாத்தான் சொன்ன ஆசை வார்த்தைக்கு மயங்கிய இருகாவலர்களும் அவர்களுடன் சேர்ந்து களவாணியாக மாறியுள்ளனர். முன்னாள் நகைகடை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். நகைக்கடை உரிமையாளர் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளித்ததால் 8 சீனியர் களவாணிகளுடன் சேர்ந்து இரு கன்னி கொள்ளையர்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

மேலும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட போலீஸ் கொள்ளையர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரு காவலர்களுக்கும் வேறு எதாவது குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகின்றது. அதே நேரத்தில் இந்த கொள்ளை கும்பலில் போலீசார் இருப்பது தெரிந்ததும், அவர்களையும் பாரபட்சமின்றி கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டது வரவேற்கதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments