மனைவி பிரிந்து சென்றதால் மாற்றுதிறனாளி மகனை பராமரிக்க முடியாமல் கொலை செய்த தந்தை! திருச்சியில் பரிதாபம்

0 8986
மனைவி பிரிந்து சென்றதால் மாற்றுதிறனாளி மகனை பராமரிக்க முடியாமல் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் மாற்றுதிறனாளி மகனை பராமரிக்க முடியாமல் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் தா .பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கூலித்தொழிலாளியான தங்கவேல், அவரது மகளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்தநிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலும்,  மகன் கோபியும் கூலித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, வாகன விபத்தில் படுகாயமடைந்த கோபி, கை மற்றும் கால்கள் செயலிழந்து படுத்த படுக்கை ஆகியுள்ளார். இதன் காரணாமாக தங்கவேலின் மனைவி செல்வராணி, மகன் கோபியை கடந்த 9 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். கோபியை குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது, மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க உதவி செய்வது போன்ற வேலைகளை தாய் செல்வராணி செய்துவந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கவேலுக்கும் மனைவி செல்வராணிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக மகன் கோபியை பராமரிக்கும் வேலையை தங்கவேல் செய்து வந்துள்ளார். ஆனால் மகனை பராமரிப்பதை தங்கவேல் சலிப்புடனும், எரிச்சலுடனேயே செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்பின் உச்சத்திற்கே சென்ற தங்கவேல் மகன் கோபியை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளார். பின்னர் கோபியின் தலையை அரிவாளால் அறுத்து, அருகில் உள்ள கழிவு நீர் தொட்டிக்குள் கோபியை போட்டு.  சிமெண்ட் பலகை கொண்டு தொட்டியை  மூடிவிட்டு தங்கவேல் தலைமறைவு ஆகியுள்ளார்.

நேரம் செல்ல செல்ல, கழிவு நீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் கோபியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தா.பேட்டை காவல்துறையினர் கோபியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த தங்கவேலை கைது செய்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மகனை பராமரிக்க முடியவில்லை. தன் காலத்திற்கு பிறகு மகனின் நிலை என்னவாகும் என நினைத்து, கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருந்ததாக தங்கவேல் தெரிவித்துள்ளார்.

பெற்ற தந்தையே, மகனை பாரமாக நினைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments