காரில் விரட்டிச் சென்று "நாம் தமிழர் கட்சி" பிரமுகர் வெட்டிக் கொலை

0 18260
காரில் விரட்டிச் சென்று "நாம் தமிழர் கட்சி" பிரமுகர் வெட்டிக் கொலை

சேலம் அருகே, சினிமா பாணியில் கார்களில் விரட்டிச்சென்று  நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிசிக் கடத்தல் மூலம் அரசியலில் நுழைந்தவர் வீழ்த்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இவர், நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.

ஒரு கொலை, 3 கொலை முயற்சி, ரேசன் அரிசி கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியாகவும் அறியப்பட்ட செல்லத்துரையை கடந்த சில மாதத்திற்கு முன்பு அடிதடி வழக்கு ஒன்றில் கிச்சிப்பாளையம் காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் செல்லதுரையின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என வழக்கு தொடர்ந்த செல்லதுரை, 15 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

செல்லதுரையை அவரது இரண்டு மனைவிகளும் வெளியில் செல்லவிடாமல் தடுத்து வீட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அம்மாபேட்டையில் உள்ள தனது வழக்கறிஞரைப் பார்க்க செல்லதுரை சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரு கார்களில் சென்ற மர்மக் கும்பல் ஒன்று சினிமா பாணியில் அவரை விரட்டியது. கிச்சிப்பாளையம் குப்பை மேடு அருகே செல்லதுரை ஓட்டி வந்த காரின் முன்புறமும் பின்புறமும் மோதி நிறுத்தியது அந்த கும்பல். காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற செல்லதுரையை விரட்டிச்சென்ற 6 பேர் கும்பல் கொடுவாள் மற்றும் வீச்சரிவாளால் தலை மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தலையில் சரமாரியாக வெட்டியதால் செல்லதுரை அதே இடத்தில் துடிதுடித்து பலியான நிலையில், அங்கு வந்த கிச்சிப்பாளையம் போலீசார், சடலத்தை பிணக்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையை அறிந்த செல்லதுரையின் உறவினர்கள் மற்றும் எஸ்.எம்.சி காலனி பொதுமக்கள் கொலை நடந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சந்திரசேகரன் சம்பவ இடத்திற்குச் சென்று செல்லதுரையின் உறவினர்களை சமாதானப்படுத்தினார். கொலைக் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் விசாரணையில் அரிசி கடத்தலால் இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. அரிசி கடத்தலைக் காட்டிக் கொடுத்த நண்பன் ஜான் என்பவரை செல்லத்துரை மிரட்டியதால், ஜான் அவனது கூட்டாளிகளுடன் வந்து செல்லதுரையை தீர்த்துக்கட்டியதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய ரவுடி கொலை செய்யப்பட்ட சமபவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை தொடர்பாக 20 பேர் கொண்ட கும்பலுக்கு தனிப்படை போலீசார் வலை விரித்த நிலையில், விக்னேஷ், ரஞ்சித்குமார், பாண்டியராஜ், சாணக்கியா, மணிகண்டன், ராஜமணிகண்டன் மற்றொரு விக்னேஷ் என 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள போலீசார், மீதமுள்ள 13 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments