சுனாமி ஆட்டோ போல நிவர் ஆட்டோ தெரியுமா ? வக்கீல் கூலிப்படை கைது

0 3326

சென்னையில் கூலிப்படையை வைத்து ஆட்டோவை திருடி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்த வழக்கறிஞர் ஒருவர், தனது கொள்ளைக் கும்பலுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் தூக்கப்பட்ட சுனாமி ஆட்டோவுக்கு நிகராக வலம் வந்த நிவர் ஆட்டோ கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.  

ஆந்திராவில் திருடிக்கொண்டு வந்து, சென்னை போக்குவரத்து போலீசாரை கவனித்தபின் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களுக்கு சுனாமி ஆட்டோ என்ற செல்லப்பெயர் உண்டு..!

அந்தவகையில், ஆந்திரா வரை செல்லாமல் நிவர் புயலைப் பயன்படுத்தி இரவோடு இரவாக சென்னை நகருக்குள்ளேயே ஆட்டோக்களைத் திருடி வாடகைக்கு விட்ட கொள்ளைக் கும்பல் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கி உள்ளது.

வலுவிழந்த நிவர் புயலின் போது கொட்டும் மழையில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோக்கள் மாயமாகின. இது குறித்து ஆட்டோ உரிமையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக தீவிர ஆய்வு செய்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தண்டையார்பேட்டை புஷ்பராஜ், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு பெருமாள், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, எழில் நகர் நரசிம்மா ஆகியோர் ஆட்டோவை திருடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கூலிப்படை போல வைத்து
எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற வழக்கறிஞர் ஆட்டோ திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பெருமாள், நரசிம்மா ஆகிய இருவரும் ஆட்டோ டிரைவர்கள் என்பதால் ஆட்டோவை திருடிச்செல்வதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர்.

வழக்கறிஞர் பிரதீப் குமார், திருட்டு ஆட்டோவை 15,000 ரூபாய்க்கு அடமானமாக பெற்றுக் கொண்டு, திருட்டு வாகனம் என தெரிந்ததும், அதன் பதிவு எண்களை மட்டும் மாற்றி நாளொன்றுக்கு 250 ரூபாய் என வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், வழக்கறிஞர் பிரதீப் குமார் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். சுனாமி ஆட்டோ பாணியில் நிவர் ஆட்டோவைத் திருடி வாடகைக்கு விட்டு சம்பாதித்த கொள்ளைக் கும்பல் போலீசில் சிக்கி இருப்பதால் ஆவடி ஆட்டோ ஓட்டுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments