இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபர் கைது

ஈரோட்டில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து, குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டான்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற அந்த நபர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகளில் டிப்டாப் உடையுடன் சுற்றி வந்துள்ளான். தினசரி வியாபாரத்தை முடித்து வங்கியில் பணம் செலுத்த வரும் சிறு வியாபாரிகளாகப் பார்த்து, தாம் அதே வங்கியில் தற்காலிக முதன்மை தொழில் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றுவதாகக் கூறுவான்.
பிறகு குறைந்த வட்டிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்கான கமிஷனை முன்கூட்டியே பெற்றுக் கொள்வான் என்று கூறப்படுகிறது.
இதற்காக சம்மந்தப்பட்ட விவசாயியின் வீட்டுக்கு டிப்டாப் உடையுடன் காரில் சென்று, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவற்றை பெற்று நம்பவைப்பான் என்கின்றனர் போலீசார்.
இப்படி பலரை ஏமாற்றி 10 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி வந்தவனை திருப்பூரில் வைத்து ஈரோடு போலீசார் கைது செய்தனர்.
Comments