புதிய வகை கொரோனா அச்சுறுத்தல்.! நவ.25 முதல் இங்கிலாந்து ரிட்டர்ன் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.!

0 3761
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

கொரோனாவின் வீரியமிக்க வைரஸ் பரவி வரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களில், மிகச்சிலருக்கு, கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு, கொரோனா பரிசோதனையோடு, சுய தனிமை அவசியம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இங்கிலாந்து நாட்டில், புதிய பரிணாமத்தில் பரவும், கொரோனா வைரசால், உலகளவில், பெருந்தொற்று குறித்த அதிர்வலை மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலிருந்து, 266 பேருடன் ஏர் இந்தியா விமானம் நேற்றிரவு 10.40 மணிக்கு தலைநகர் டெல்லி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 6 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இங்கிலாந்தில் இருந்து, இன்று காலை டெல்லிக்கு வந்த, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து வந்த பயணிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கான முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில், நவம்பர் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என, மத்திய, மாநில சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்களின் மாதிரிகளை புனேவிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் சுய தனிமை அவசியம் என்றும், மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வருவோர் தங்களை தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொள்வது அவசர அவசியம் என்பதை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு 14ஆவது நாளில் கொரோனா உறுதியானாலும், அடுத்த 14 நாட்களுக்கு பரிசோதனையை தொடர வேண்டும் என்றும், தொடர்ச்சியாக, 2 அல்லது 3 முறை நெகட்டிவ் என வந்தால் மட்டுமே, அவர்களுக்கு பெருந்தொற்று பாதிப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் தற்போது புதிய பரிணாமத்தில் பரவும் கொரோனா வைரஸ் இளையோரையே அதிகம் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரவு 9 மணி நிலவரப்படி, இங்கிலாந்தில் இருந்து, இந்தியா திரும்பியவர்களில், 20க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், டெல்லி வழியாக, நேற்றிரவு கொல்கத்தா திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மேற்குவங்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து குஜராத் வந்த 275 பேரில் 4 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் வந்த 262 பேரில், 8 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments