தங்க கலசங்களால் தகதகவென ஜொலிக்க இருக்கும் சோம்நாத் ஆலயம்

0 1715

குஜராத்தில் உள்ள சிவபெருமான் தலமான சோம்நாத் ஆலயத்தில் 1400 தங்க கலசங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது உலக புகழ்பெற்ற சோம்நாத் ஆலயம். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்தில் சோம்நாத் ஆலயத்தில் குடிக்கொண்டிருக்கும் சோமநாத சிவபெருமானின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

புராண சிறப்பு வாய்ந்த சோம்நாத் ஆலயம் குஜராத் பகுதியில் நடந்த படையெடுப்புகளால் கி.பி. 725ல் இருந்து கி.பி 1701ம் ஆண்டு வரை 6 முறை பல்வேறு மன்னர்களால் இடிக்கப்பட்டது. ஆனால் ஆலயம் இடிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அந்த கால இந்து மன்னர்களின் அயராத முயற்சியால் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.

இறுதியாக 1951ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், புதிய கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் ஆண்டு ஆலயம் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சாளுக்கிய கட்டடக் கலைப்படி கட்டப்பட்டுள்ள சோம்நாத் ஆலயத்தில் 1400 கலசங்கள் உள்ளன. தற்போது அந்த 1400 கலசங்களையும் தங்க கலசங்களாக மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள 1400 தங்க கலசங்கள் இரவிலும் தகவென ஜொலிக்கும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. தங்க கலசங்கள் அமைக்க இது வரை 500 பேர் நன்கொடை அளித்துள்ளனர். தங்க கலசங்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடியுமென சோம்நாத் ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments