உலகை மிரட்டும் கொரோனா வைரஸின் புதிய திரிபு... தடுப்பூசிகளின் நிலைமை என்ன?

0 5224

கொரோனா வைரஸின் புதிய திரிபு, பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா உட்பட முப்பது நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.  

கொரோனா வைரஸ்க்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் புதிய கொரோனா வகை கொரோனா வைரஸ்க்கு எதிராகச் செயல்படுமா என்ற அச்சம் உலகம் முழுவதும் எழுந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய மருந்துகள் முகமை, “கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுக்கு எதிராகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் செயல்பட முடியும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

image

அமெரிக்காவைத் தவிர பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுக் குறைந்து வந்தது. இதே வேளையில், தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், ஐரோப்பிய மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வந்தன. இந்த நிலையில், மெல்லக் குறைந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதியவகை கொரோனா வைரஸ், வழக்கமான கொரோனா வைரஸ் பரவுவதை விடவும் 70 சதவிகிதம் அதிவேகமாகப் பரவி வருவதாகவும், இது சூழலுக்குத் தகுந்த மாதிரி செயல்படுகிறது என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் புதிய வகை திரிபால், பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால், பிரிட்டனில் ஞாயிற்றுக் கிழமையன்று 35,928 பேருக்கும், திங்கள் கிழமையன்று 33,364 பேருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரிட்டன் பகுதிகளில் இந்த மாத இறுதி வரை கடுமையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

image

இந்த நிலையில் பிரிட்டன், “கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் வீடுகளில் இருந்தபடியே பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும்” என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என்று பல்வேறு உலக நாடுகள் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தைத் துண்டித்துள்ளன.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஏற்கெனவே கொரோனாவுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் நிலைமை என்ன? அவை செயல்படுமா என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்தது.

அதற்குப் பதில் அளித்துள்ள ஐரோப்பிய மருந்துகள் முகமை (ஈ.எம்.ஏ) தலைவர் எமர் குக், “கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகத் தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியால் செயல்பட முடியும். மேலும், தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராகச் செயல்படாது என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திங்கள் கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments