தொழில் போட்டி... ரவுடிகளை ஏவி தாக்குதல்..!
சென்னை அடையாறில் விற்பனை நிறுவனத்தில் புகுந்து சொகுசு கார்களை அடித்து தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தொழிற் போட்டியால் ரவுடிகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
சென்னையில் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை வாங்கி விற்கும் தொழிலை சஞ்சீவ் குமார் மற்றும் பாலமுருகன் இருவரும் இணைந்து செய்து வருகின்றனர். அடையாறில் செயல்படும் இந்நிறுவனத்தில் கடந்த 18-ம் தேதி இரவு 11 மணியளவில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. காவலாளியை கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள் நுழைவு கேட் மீது ஏறி குதித்து கட்டை, இரும்பு கம்பிகளுடன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் நிறுவனத்தின் கண்ணாடிகளை உடைத்ததோடு, ஆடி, ஜாக்குவார், வால்வோ உள்ளிட்ட சொகுசு கார்களின் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கினர். தாக்குதல் நடத்திய கும்பல் ஏவி விட்ட கும்பல் தலைவனுக்கு வாட்ஸ் அப்பில் லைவ் வீடியோ செய்து காண்பிக்க, கார் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் வீடியோ கால் மூலம் காண்பித்து மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்து விசாரணை நடத்திய சாஸ்திரி நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருவான்மியூரை சேர்ந்த 5 பேர் கைது செய்தனர்.
விசாரணையில் தொழிற் போட்டி காரணமாக இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விற்பனை நிறுவனத்தை நடத்தி வரும் சஞ்சீவ் குமார், பாலமுருகன் இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலை பாலவாக்கதில் கார் ஸ்டூடியோ என்ற விற்பனை நிறுவனத்தை கடந்த 2017 முதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் மற்றொரு பங்குதாரராக சபரிகிரி நாதன் என்பவரும் இருந்ததாகவும், தொழிலில் சபரிகிரி நாதனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மற்ற இருவரும் தனியாக பிரிந்து மற்றொரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
இதனால் ஈசிஆர் வசந்த், மோகன்பாபு ஆகியோர் மூலம் ஆட்களை ஏவி சபரிகிரி நாதன் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சஞ்சீவ் குமார் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஈசிஆர் வசந்த், சபரிகிரிநாதன், மோகன்பாபு உட்பட மேலும் 5 பேரை தேடி வருவதாக சாஸ்திரி நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments