மழை வெள்ளத்தில் ஊருக்குள் வந்தது; சிதம்பரத்தை மிரட்டிய முதலை பிடிபட்டது!

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள குட்டையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியபடி பதுங்கியிருந்த முதலைக் குட்டி ஒன்று ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாகப் பெய்த கனமழை காரணமாக அடித்து வரப்பட்ட முதலைகள் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அவ்வப்போது தென்பட்டு வருகிறது. அதை வனத்துறையினர் பிடித்துப் பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ளது சி.கொத்தங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான நாகமுத்து நகரில் பொதுமக்கள் உபயோகப் படுத்தும் குட்டை ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக, வெள்ளை நீரில் அடித்து வரப்பட்ட நான்கடி நீளம், 70 கிலோ எடை கொண்ட முதலைக் குட்டி ஒன்று இந்த குட்டையில் தஞ்சமடைந்தது. கடந்த சில நாட்களாக, அந்தப் பகுதி மக்களை இந்த முதலைக்குட்டி அச்சுறுத்தி வந்த நிலையில், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த வனத்துறையினர் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் குட்டையிலிருந்த நீர் முழுவதையும் இறைத்தனர். இதையடுத்து நந்தி மங்கலத்தைச் சேர்ந்த முதலை பிடிக்கும் குழுவினர் வலையைப் போட்டு முதலையைப் பிடித்தனர். பிறகு, முதலையைப் பத்திரமாக அருகில் உள்ள வர்க்காரமாரி ஏரிக்குக் கொண்டு சென்று விட்டனர்.
கடந்த நான்கைந்து தினங்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Comments