சினிமா பாணியில் கொள்ளை... காட்டி கொடுத்த மூன்றாவது கண்

0 3743
சென்னையில் போலீஸ் போர்வையில் அசோக்நகர் தொழிலதிபர் வீட்டில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் போலீஸ் போர்வையில் அசோக்நகர் தொழிலதிபர் வீட்டில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.  கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முன்னாள் MLA வின் அண்ணன் மகனை பிடிக்க, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது. 

கொள்ளை சம்பவங்களை யார் கண்ணிலும் படாமல் அரங்கேற்றினாலும், நிச்சயம் மூன்றாவது கண்ணில் இருந்து தப்ப முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் சென்னை - அசோக்நகர் 19ஆவது செக்டார் 71ஆவது தெருவில் நிகழ்ந்துள்ளது.

இங்கு வசிக்கும் தொழிலதிபர் எஸ்.பி. பாண்டியன் என்பவரின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் தேதி மாலை பொலீரோ வாகனத்தில் சீருடை அணி யாமல் வந்த ஒரு கும்பல், தங்களை போலீசார் என அறிமுகம் செய்து கொண்டு, உள்ளே நுழைந்தனர்.

தொழிலதிபர் வைத்திருக்கும் 2 துப்பாக்கிகளுக்கும் லைசென்ஸ் காலாவதி ஆகி விட்டதால் பறிமுதல் செய்வதற்காக வந்திருப்பதாக கூறிய கொள்ளையர்கள், சோதனை என்ற பெயரில், வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கம், 45 சவரன் நகை மற்றும் விலையுயர்ந்த காரை கொள்ளை யடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

சிசி டிவி காட்சி மூலம் நடத்திய விசாரணையில், 10 பேர் கொண்ட கொள்ளை கும்பல், இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட போலி பதிவெண் கொண்ட பொலீரோ வாகனம் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஓட்டி வந்த டிரைவர் நெற்குன்றம் சதீஷ், முதலில் பிடிபட்டான்.

சதீஷ் கொடுத்த தகவலின் பேரில் சிக்கிய சிவா என்ற இளைஞர், அசோக்நகர் தொழிலதிபர் எஸ்.பி. பாண்டியனின் நிறுவனத்திற்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும், இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்ததே அவன் தான் என்பதும் உறுதி செய்யப் பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை கும்பலின் தலைவனாக பூமிநாதன் என்ற பலே கொள்ளையன் இருந்தது தெரியவந்தது. வழிப்பறி - கொள்ளை - கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய பூமிநாதன், திருவொற்றியூரில், ராஜேந்திரன் என்பவரின் சலூன் கடையில் கூடி, கொள்ளை திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பூமிநாதன், முன்னாள் MLA எர்ணாவூர் நாராயணின் அண்ணன் மகன் என விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவித்தனர். பூமிநாதனுக்கு சிறையில் அறிமுகம் ஆன எடப்பாடியைச் சேர்ந்த கார் டிரைவர் அஜித் குமார் என்பவனையும், அவனது கூட்டாளிகளையும் கொள்ளையில் ஈடுபடுத்தி இருந்தது தெரியவந்தது.

போலீசாரிடம் சிக்கிய நெற்குன்றம் சதீஷ், அசோக் நகர் சிவா , எடப்பாடி அஜித்குமார், திருவொற்றியூர் அந்தோணி ஆல்பி லாம்பி என்ற ரூபன்மற்றும் திருவொற்றியூர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரிடம் இருந்து தொழிலதிபர் எஸ்.பி. பாண்டியனின் விலை உயர்ந்த கார் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அசோக்நகர் கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முன்னாள் MLA வின் அண்ணன் மகன் பூமிநாதன் பிடிபட்டால் மட்டுமே ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகளை மீட்க முடியும் என்பதால், கே.கே.நகர் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments