அடுத்த 4 நாட்களில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவுமென கூறப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 86 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும், குறைந்த பட்சமாக 71.6 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் வெப்பநிலை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு கடல் பரப்பில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், அந்த கடல் பரப்பிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments