அப்துல்கலாம் சிலைக்கு அலங்காரம்: சோசியல் மீடியாவில் பிரபலம்... பொறாமையில் சிவதாசனை கொன்ற நண்பர்

0 7057

கேரளாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சிலைக்கு தினமும் மலர் அலங்காரம் செய்து , சோசியல் மீடியாவில் பிரபலமான சிவதாசனை அவரின் நண்பர் பொறாமை காரணமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வெகு பிரபலம். கேரள மக்களுக்கு அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு உண்டு. இதனால், கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் அப்துல் கலாமுக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கொச்சி மாநகர மேம்பாட்டு கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த சிலைக்கு அந்த பகுதியில் வசித்த சிவதாசன் என்ற 63 வயது முதியவர் தினமுர் மலர் அலங்காரம் செய்து , வழிபடுவார். கொல்லத்தை சேர்ந்த சிவதாசன், கடந்த மூன்று வருடங்களாக இந்த பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தச்சு தொழிலாளியான சிவதாசனுக்கு கொல்லத்தில் வீடு உள்ளது. ஆனால், கலாம் சிலைக்கு தினமும் மலர் அலங்காரம் செய்வதால், கொல்லத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு நாள் கூட தங்கியதில்லை என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில், சிவதாசன் அப்துல் கலாமுக்கு மலர் அலங்காரம் செய்வது போன்ற  வீடியோ மீடியாக்களில் வெளியாகி கேராளவில் வைரலானது. அந்த வீடியோவில், தான் அப்துல்கலாமை ஒரு முறை கொல்லத்திலும் மற்றோரு முறை திருவனந்தபுரத்திலும் சந்தித்தாக சிவதாசன் கூறியிருந்தார். அதோடு, திருவனந்தபுரத்தில் அப்துல் கலாமை சந்தித்த போது, தனக்கு அப்துல் கலாம் போக்குவரத்து செலவுக்கு ரூ. 500 கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மீடியாக்களில் சிவதாசன் பற்றி செய்தி வெளியானதால் கொச்சியில் ஒரே நாள் இரவில் சிவதாசன் பிரபலமாகி விட்டார்.

கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் தெருவோரம் வசித்து வந்த சிவதாசனுக்கு சிலர் நிதியுதவி அளித்துள்ளனர். சிவதாசன் வசிக்க சிறிய வீடு கூட வழங்க முன் வந்ததாக தெரிகிறது. இந்த சிவதாசனுக்கு அதே பகுதியில் வசிக்கும் சுதீர் என்ற நண்பர் உண்டு. சிவதாசன் திடீரென்று மக்கள் மத்தியில் பிரபலமானது சுதீருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 15 - ஆம் தேதி சிவதாசன் மரைன்டிரைவ் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடற் கூறு ஆய்வில், சிவதாசனின் உடல் உள்பாகங்களில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக இறந்து போனதாக தெரிய வந்தது. இதனால், யாரோ ஒருவர் தாக்கிதான் சிவதாசன் மரணமடைந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், சிவதாசனுக்கு நெருக்கமானவர்களை பிடித்து விசாரித்தனர். சுதீரை பிடித்து விசாரித்த போது, மது போதையில் சிவதாசனை கொன்றது தெரிய வந்தது. இது குறித்து கொச்சி போலீஸார் கூறுகையில், சோசியல் மீடியாவில் சிவதாசன் பிரபலமானது முதல் சுதீர் பொறாமையில் இருந்துள்ளார். தினமும், மது குடித்து விட்டு சிவதாசனை அடித்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி இரவு மது அருந்திய சுதீர், சிவதாசனை சராமரியாக தாக்கியுள்ளார். சிவதாசனின் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையாக தாக்கியதில், நினைவிழந்த சம்பவ இடத்திலேயே இறந்து போனார் என்று கூறுகின்றனர். சிவதாசனை கொலை செய்த சுதீரை கொச்சி துணை கமிஷனர் லால்ஜி தலைமையில் கைது செய்த போலீஸார்  விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments