800 ஆண்டுகளுக்கு பின் விண்ணில் ஒரு அதிசயம்

0 8256
800 ஆண்டுகளுக்கு பின் விண்ணில் ஒரு அதிசயம்

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அபூர்வ நிகழ்வு 21 ஆம் தேதி வானத்தில் நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வை நாளை தமிழகத்தில் பார்க்கலாம் என்று வானவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சூரியனை பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் இருக்கும் தூரத்துக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை சூரியனை சுற்றிவருகின்றன. இதில் சூரியனில் இருந்து வியாழன் 5-வது வரிசையிலும், சனி கிரகம் 6-வது வரிசையிலும் சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றி வரும் போது, ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் சில நேரங்களில் நேர் கோட்டில் வருவது உண்டு. அவ்வாறு வரும்போது புவியில் இருந்து பார்த்தால் அவை ஒரே நட்சத்திரம் போல தெரியும். இதேபோன்ற ஒரு நிகழ்வு 21 ஆம் தேதி வானத்தில் நடக்கப்போகிறது. அன்று வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.

ஏசு கிறிஸ்து பிறந்த போது வானத்தில் பிரகாசமான நட்சத்திரம் தோன்றியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அது 2 கோள்கள் நேர்கோட்டில் தோன்றியதால் ஏற்பட்ட பிரகாசமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதே போன்று 21-ந்தேதி மீண்டும் சனி மற்றும் வியாழன் கிரகங்கள் நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன. நமது கண்ணுக்கு அவை ஒரே நட்சத்திரம் போல தெரிந்தாலும் இரு கிரகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 60 கோடி கிலோ மீட்டர் ஆகும்.

சனியும், வியாழன் கிரகமும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. ஆனால் பூமியில் இருந்து வெவ்வேறு கோணத்தில் நேர்க்கோட்டுக்கு வருவதால் அதை நாம் காண்பது அரிது. கடைசியாக 2000-ல் அவை ஒன்றாக தோன்றினாலும் சூரியனுக்கு அருகே தென்பட்டதால் அவற்றை பார்க்க முடியவில்லை.

இதற்கு முன்பு 1623-ம் ஆண்டு இதேபோல இரு கிரகங்களும் நேர்க்கோட்டில் பிரகாசமாக காட்சி அளித்தன.அப்போது அவை நெருங்கி இருந்தாலும் கூட பூமியில் இருந்து வேறு கோணத்தில் இருந்ததால் சரியாக பார்க்கமுடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக 1226-ம் ஆண்டு இரு கோள்களும் இதேபோல நேர்க்கோட்டில் வந்தன. இப்போது 800 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற ஒளியை பிரகாசமாக வெளிப்படுத்தும் நிகழ்வு 21-ந்தேதி நடக்கப்போகிறது.

21 ஆம் தேதி மாலை சூரியன் மறைந்து அரை மணி நேரத்தில் இந்த இரு கோள்களும் ஒன்றாக தெரிவதை காணலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை மாலை 6.30 மணிக்கு தென்படும். 30 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை பார்வைக்கு நன்றாகத் தெரியும். இந்த காட்சி வானத்தில் தென்மேற்கே அரை கோளத்துக்கு கீழே அடிபகுதியில் தென்படும். அடுத்ததாக ஒவ்வொரு 20 ஆண்டுகளிலும் இதேபோல இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments