'கூவத்துல குதிச்சா விட்டுடுவோமா என்ன?'- சினிமா பாணியில் காவலர் நடத்திய சேசிங்

0 5136

சென்னையில் முதியவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு கூவத்தில் குதித்து தப்பிக்க முயன்றவனை காவலர் ஒருவரும் கூவத்தில் குதித்து பிடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள மேம்பாலம் வழியாக மாம்பலத்தை சேர்ந்த 63 வயதான ரவிக்குமார் என்ற முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். முதியவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தி முனையில் அவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளான். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை காவல் ஆணையரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் காவலர் கவின் இதை கண்டு அவனை விரட்டியுள்ளார்.

காவலர் தன்னை துரத்துவதை கண்ட கொள்ளையனும் இன்னும் வேகமாக ஓட்டம் பிடித்துள்ளான். தன்னை விடாமல் துரத்தி வரும் காவலரிடமிருந்து தப்பிக்க கொள்ளையன் எதிர்பாராத முடிவை எடுத்தான். அதன்படி அருகிலிருந்த நாற்றமடிக்கும் கூவத்தில் குதித்தால் காவலர் தன்னை பின் தொடர முடியாது என்று கருதிய கொள்ளையன், கூவத்தில் குதித்துள்ளான். ஆனால் சற்றும் தயங்காத காவலர் கவின் தீபக்கும் கூவத்தில் குதித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த கொள்ளையன் எதிர் பக்கத்தை நோக்கி இன்னும் வேகமாக ஓடியுள்ளான். ஆனால், துரத்துவதை விடாத காவலர் தீபக், கொள்ளையனைப் பிடித்துள்ளார். தன்னை பிடித்த காவலர் கவினின் விரலை கடித்துவிட்டு கொள்ளையன் தப்பித்துள்ளான்.

கூவத்தில் காவலர் மற்றும் கொள்ளையனுக்கிடையே நடந்த போராட்டத்தை கண்ட பொதுமக்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையனுக்காக மறுகரையில் காத்திருந்தனர். இதனை எதிர்பாராத கொள்ளையன் கரையில் நின்ற எழும்பூர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளான். கொள்ளையனை பிடித்த போலீசார் அவனை எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். கூவத்தில் குதித்து தப்ப முயன்ற செல்போன் கொள்ளையனை சற்றும் தயங்காமல் கூவத்தில் குதித்து பிடிக்க முயன்ற காவலர் கவின் தீபக்கை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவரிடம் செல்போன் வழிப்பறி செய்த கொள்ளையன் கண்ணகி நகரை சேர்ந்த சேகர் என்ற சிந்துபாய் என்பது தெரிய வந்தது. இவன் மீது ஏற்கெனவே பல செல்போன் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments