மற்றொரு தொழில்புரட்சிக்கு உலகம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா இப்போதே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

மற்றொரு தொழில்புரட்சிக்கு உலகம் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர், அதற்காக இந்தியா இப்போதே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொழில்-வர்த்தகக் கூட்டமைப்பான அசோசம் (ASSOCHAM) நூற்றாண்டு வார விழா நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நூற்றாண்டின் சிறந்த தொழில்நிறுவனத்திற்கான விருதை டாடா குழுமத்திற்கு வழங்கினார். இந்த விருதை தொழிலதிபர் ரத்தன் டாடா பெற்றுக்கொண்டார்.
கொரோனா பேரிடர் காலத்திலும் நாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் பிரதமருக்கு நாம் கடமைப்பட்டிருப்பதாக அப்போது ரத்தன் டாடா குறிப்பிட்டார்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தற்சார்பு இந்தியாவின் எழுச்சி என்ற தலைப்பில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை எட்டுவது மட்டுமல்ல, அந்த இலக்கை எவ்வளவு விரைவாக எட்டுவது என்பதும் நம்முன் உள்ள சவால் என அவர் குறிப்பிட்டார்.
உலகம் மற்றொரு தொழிற்புரட்சியை நோக்கி செல்வதாகவும், அதற்கேற்ப தேசத்தை கட்டமைக்கும் இலக்குகளை இப்போதே திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று முன்னர் வினவிய முதலீட்டாளர்கள், சீர்திருத்தங்களுக்கு பிறகு இந்தியாவில் ஏன் முதலீடு செய்யக்கூடாது என கேட்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலகமே நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலத்தில் முதலீடுகளை திரட்டாமல் உலகமே அல்லாடிய நிலையில், இந்தியா சாதனை அளவாக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Comments