சிதம்பரத்தில் பத்து நாட்களாகப் போராடும் மருத்துவ மாணவர்கள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

0 6210

சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மற்ற அரசு கல்லூரிகளைப்போலவே குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்கள் கடந்த பத்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் குறித்து விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ’கல்லூரி நிர்வாகம் எவ்வளவு மிரட்டினாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்’ என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வருகிறது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி. கடந்த 2013 ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சிறப்புச் சட்டம் இயற்றி மருத்துவக் கல்லூரியை அரசுடைமை ஆக்கினார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்டத்தின் அரசு கல்லூரியாகச் செயல்படும் என்று சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தமிழக அரசு ஏற்ற பிறகும் மாணவர்களிடம் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையாகப் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.30,000 வசூலிக்கப்படும் நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஒன்பது லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். 

இந்த நிலையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த பத்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அறிவித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்கக்கோரி கையெழுத்து இயக்கம், உள்ளிருப்பு போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு விதமான போராட்டங்களைத் தினந்தோறும் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு முன்பு 200 க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் திரண்டு கையில் மெழுகுவர்த்தியுடன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு போராட்டத்தை நடத்தினார்கள். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியின் நடவடிக்கை குறித்து மாணவர்கள், “எங்கள் கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாகவே நாங்கள், நூதனமாக கவனயீர்ப்பு போராட்டங்களைக் கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறோம். எங்களது பணி ஓய்வின் போது மட்டுமே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். யாருக்கும் இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடத்தவில்லை. கல்லூரி நிர்வாகம் எவ்வளவு மிரட்டினாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்“ என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments