ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனம் ரூ.7,926 கோடிக்கு வங்கிக் கடன் மோசடி.. சி.பி.ஐ. வழக்குப்பதிவு..!

0 2503

தெலுங்குதேசம் முன்னாள் எம்.பி. ஒருவரை நிர்வாகியாகக் கொண்ட, டிரான்ஸ்ட்ராய் என்ற நிறுவனம் கனரா வங்கிகளில் 7 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

தெலுங்கு தேசம் கட்சியின் ராயபதி சாம்பசிவராவை நிர்வாகியாகக் கொண்ட ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனம் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள கனரா வங்கிக் கிளைகளில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்காக அந்த நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்தல், நிதியை வேறு நிறுவனங்களுக்கு திருப்பிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கனரா வங்கிக்கு 7 ஆயிரத்து 926 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐயில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனத்தின் ஹைதராபாத் மற்றும் குண்டூரில் உள்ள அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோசடி தொடர்பாக எம்பி ராயபதி சாம்பசிவராவ், ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் செருக்குரி ஸ்ரீதர், அதே நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் அக்கினேனி சதீஷ் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இதே நிறுவனத்தின் மீது 3 ஆயிரத்து 822 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சென்னையில் இணைய கல்வி வழங்கும் அக்னைட் என்ற நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் சுமார் 310 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் போன்றே வாரியா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் 452 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments