அமெரிக்கர்களே தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு

கடந்த இரு நாட்களாக அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை பனிப்புயல் மிரட்டி வருகிறது.
நம்ம ஊரில் மார்கழி பனிக்கே பலரால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் பனி என்பது சாதரண ஒரு விஷயம் தான். ஆனால் அப்படிப்பட்ட அமெரிக்கர்களே தாங்க முடியாத அளவிற்கு தற்போது பனி புயல் வீசி வருகிறது.
அமெரிக்காவின் கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் என்று பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
குறைந்த காற்றழுத்தப்பகுதியில், ஈரக்காற்றின் அளவு அதிகரிக்கும் வேளையில் பனிப்பொழிவும் அதிகரிக்கும். அந்த சமயத்தில், காற்றின் வேகம் அதிகரித்தால் பனிப்பொழிவு, பனிப்புயலாக மாறும். அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது, வாடிக்கையான நிகழ்வுதான். இருப்பினும் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பன்மடங்கு அதிகமாகி உள்ளது.
தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் எங்கும் பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து உள்ளன. இதேபோல், மின் இணைப்புகளும், எரிவாயு குழாய்களும், சேதம் அடைந்து உள்ளன.
மேலும் அமெரிக்காவின் இதயமாக கருதப்படும் நியூயார்க் நகரம் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. சுமார் மூன்றரை அடி உயரத்திற்கு பனி சாலைகளில் கொட்டிக் கிடப்பதால், பல நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விர்ஜீனியா, நியூயார்க் மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயலால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகள், மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. இதனிடையே, ஆடல், பாடல் விளையாட்டுகளுடன் பனிப்புயலை வழக்கம்போல் சில அமெரிக்கர்கள் வரவேற்கத் தொடங்கிவிட்டனர் . ஏற்கனவே அமெரிக்க மக்களை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பனிப்பொழிவு அம்மக்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.
Comments