மலிவு விலை அரிசி போல மலிவு விலை தங்கக்கட்டி... 2 வருடங்களுக்கு பிறகு 'தில்லாலங்கடி' தம்பதி கைது

0 8335

காரைக்குடியில்  மலிவு  விலையில் தங்கக்கட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி 2 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மற்றும் கயல்விழி. கணவன் , மனைவியான இவர்கள் தங்களை வங்கியில் பணி புரிவதாக அந்த பகுதி மக்களிடத்தில் கூறி வந்துள்ளனர். அதோடு, சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலையில் 24 கேரம் தங்கக்கட்டி பாதி விலையில் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதி பெண்களிடத்தில் பணம் வசூலித்துள்ளனர். அப்படி, 30 பேரிடத்தில் ரூ. 3 கோடி வரை ஆட்டையை போட்டுள்ளனர்.

பணம் இல்லாதவர்கள் நகைகளாகவும் தரலாம் என்றும் கூறி அடகுகடையில் பணியாற்றும் அகில் என்பவரிடத்தில் கொடுக்க சொன்னார்கள். இதை நம்பிய அப்பாவி பெண்கள் 500 பவுன் நகைகள் வரை அகிலிடத்தில் கொடுத்துள்ளனர். உத்திரவாதமாக பத்திரமும் எழுதி கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சேர்ந்த பணம் மற்றும் அடகு வைத்த நகைகளுடன் மாணிக்கம், கயல்விழி மற்றும் அகில் மதுரைக்கு தப்பியுள்ளனர். பிறகு, சிறிது காலம் மதுரையிலும் தங்கியிருந்து இது போன்று பலரை ஏமாற்றியுள்ளனர். அங்கு, போலீஸில் புகார் செய்யப்பட்டதும் மதுரையிலிருந்தும் எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த நிலையில், காரைக்குடி போலீஸில் மோசடியில் ஈடுபட்ட தம்பதி குறித்து 7 மாதங்களுக்கு முன்பு புகாரளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், மாணிக்கம் மற்றும் கயல்விழி கோவையில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை சென்ற காரைக்குடி போலீஸார் ஒண்டிப்புதூர் பகுதியில் பதுங்கியிருந்த மாணிக்கம், கயல்விழியை கைது செய்தனர். இவர்களின், கூட்டாளியான அகில் இன்னும் பிடிபடவில்லை. அகிலையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments