கணவர் மரணம்: சோகம் தாளாமல் மருத்துவம் படிக்கும் மகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி!
கள்ளக்குறிச்சி அருகே, கணவர் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவம் படிக்கும் மகளுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வசித்து வந்தவர் லலிதா. அழகுக் கலை நிபுணரான இவரின் கணவர் பால முருகன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு இறந்து போனார். இதனால், லலிதாவும் மகள் தர்ஷினியும் கடும் வேதனையடைந்தனர்.
புதுவை அருகேயுள்ள மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் தர்ஷினி மயக்கவியல் நிபுணருக்கு படித்து வந்தார். கணவர் இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் தவித்த மனைவியும் தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத தர்ஷினிக்கும் அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர்.
இந்நிலையில் , லலிதாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் லலிதாவும், தர்ஷினியும் தற்கொலை செய்து கொண்டனர். தாயும் மகளும் நீண்ட நேரம் காணாததால் அக்கம் பக்கத்தினர் லலிதாவின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, உள்ளே இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள்.
உடனடியாக, அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தாயும் மகளும் இறந்து போனதாக கூறி விட்டனர். கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் இறந்த சோகத்தில் மனைவி , தன் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments