டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

0 2156

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில், தடையை மீறி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனினும், திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கொங்கு ஈஸ்வரன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறு என்ற வாசகம் பொருந்திய முகக் கவசத்தை தலைவர்களும் தொண்டர்களும் அணிந்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடக்க உரையாற்றிய மு.க.ஸ்டாலின், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை இயற்றியிருப்பதாகவும், பல மாநில அரசுகள் அதன் அபாயத்தை உணராமல் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை மத்திய அரசு தேச விரோத சக்திகள் என்று சித்தரிப்பதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் திமுக தலைவர் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம், போராட்டம் தொடரும் என்றார்.

புதிய வேளாண் சட்டங்கள் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலுக்கே பயன்படும் என குற்றம்சாட்டிய திருமாவளவன், பொது விநியோகத் திட்டத்திற்கும் ஆபத்தாக முடியும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments