காட்டு யானை தாக்குதல்... கணக்கெடுக்க சென்றவர்கள் பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு பணியின் போது யானை தாக்கி வன காவலர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 350 பேர் குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்குப் பகுதியில் வனக்காப்பாளர் பொன் கணேஷ் தலைமையில் வனக்காவலர் சதீஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 6 பேர் குழுவாக வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த காட்டு யானை ஒன்று, அவர்களை திடீரென துரத்தி தாக்கத் தொடங்கியது. போதிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டுசெல்லாததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்கள் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வனக்காவலர் சதீஷ் மற்றும் தன்னார்வலர் பிரபாகரன் ஆகியோர் யானையின் பிடிக்குள் அகப்பட்டு உயிரிழந்தனர்.
இவர்களைக் காப்பாற்ற முயன்று படுகாயமடைந்த வனக்காப்பாளர் பொன் கணேஷ், சத்தியமங்கலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யானை தாக்கி உயிரிழந்த சதீஷ், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் என்றும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. தன்னார்வலர் பிரபாகரன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments