வெப் சீரீஸ் காதல் இயக்குனர் ரஞ்சித் கைது..! அடைத்து வைத்து நடிகைக்கு டார்ச்சர்
சென்னையில் வெப்சீரிஸ் எடுப்பதாக அழைத்துச்சென்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஷூட்டிங் பங்களாவில் அடைத்து வைத்து நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளம் இயக்குனர் ரஞ்சித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்சார் இல்லை என்பதால் இருட்டுக்குள் நடப்பதை தன் இஷ்டத்துக்கு காட்சிகளாக்கி வெளிச்சத்தில் படம் பிடித்து ஓடிடியில் வெளியிடும் இளம் இயக்குனர் ரஞ்சித் இவர் தான்..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள சாய் நிவாஸ் எனும் தனியார் ரிசார்ட்டில், த்ரீ சம் என்ற வெப் சீரீஸ் படபிடிப்பை நடத்தி வந்தார் ரஞ்சித். அவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார். ரஞ்சித்துடன் உதவியாளர்களான கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி நடிப்பு சொல்லிக் கொடுப்பதாக அடைத்து வைத்து இளம் இயக்குநர் ரஞ்சித், அவருடைய உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் ஆகியோர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார் அந்த நடிகை..!
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த நடிகையை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் ஆகியோர் காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
நடிகை அளித்த புகாரைத் தொடர்ந்து ரஞ்சித், மற்றும் இரு உதவியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த நடிகை கடந்த ஒரு மாதமாக தன்னுடன் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்ததாக தெரிவித்த இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட அதீத காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை குத்தியுள்ளதாக காவல்துறையினரிடம் கூறினார்.
மேலும் சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது அறையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய காதலை நடிகையிடம் தெரிவித்த போது அந்த நடிகை மறுப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ரஞ்சித் நடிகையை தாக்கியது தெரியவந்தது.
இயக்குனர் ரஞ்சித் உடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை குறித்து போலீசார் கேட்டபோது, அப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழவில்லை என்றும் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அடைத்து வைத்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரஞ்சித் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரஞ்சித் உதவியாளர்கள் கார்த்திக், ரியாஸ் இருவருக்கும் அதில் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என தெரிவந்ததால் இருவரையும் விடுவித்தனர்.
வெப் சீரியஸ் எடுப்பதாக கூறி சைக்கோ மன நிலை கொண்டவர்களை நாயகர்களாக்கி வயது வந்தோருக்கான தொடர்களை இயக்குவோர் அதனை நிஜத்தில் செய்து பார்த்தால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாகி இருக்கின்றது.
Comments