ஹேம்நாத்திடம் 9 மணி நேரம் ஆர்டிஓ விசாரணை.! வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள்.?

0 162247
நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை நடைபெற்றதா? என்பது பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில், முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சித்ரா, பதிவு திருமணம் செய்த , ஒரே வருடத்தில், தற்கொலை முடிவை மேற்கொண்டதால், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று, சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ முன்னிலையில் ஆஜராகினர்.

செவ்வாய்க்கிழமையன்று, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின், தந்தை ரவிச்சந்திரன், தாயார் வசந்தா ஆகியோரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஹேம்நாத்திடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினார். இதற்காக, பொன்னேரி கிளைச் சிறையில் இருந்து காலை 6.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஹேம்நாத், காலை 8 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்டிஓ திவ்யஸ்ரீ, காலை 8.10 மணியளவில் தனது விசாரணையைத் தொடங்கினார்.

ஹேம்நாத்திடம் சுமார் 9 மணி நேரம் நீடித்த ஆர்டிஓ விசாரணையின்போது, 60 பக்கங்கள் அளவிற்கு வாக்குமூலம் பெறப்பட்டு, கையெழுத்தும் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர், பலத்த பாதுகாப்புடன், பொன்னேரி கிளைச் சிறைக்கு ஹேம்நாத் அழைத்துச் செல்லப்பட்டார். ஹேம்நாத்தை சந்திக்க, 6 மணி நேரமாக காத்திருந்தும், அவரது தந்தை ரவிச்சந்திரனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே, ஹேம்நாத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, சித்ராவுடன் நடைபெற்ற உரையாடல் என்ன? கோபமாக பேசியது யார்? சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன? சித்ராவை கொன்றதாக அவரது தாயார் கூறியது உண்மையா?  வரதட்சணை கொடுமை நடைபெற்றதா? என்பது பற்றிய கேள்விகளுடன், விசாரணை நீண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சித்ராவை படபிடிப்பு தளங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் காரில் அழைத்துச் சென்று வந்ததாகவும், அவரிடம் பணம் கேட்டு எந்த தொந்தரவும் செய்யவில்லை என்றும், விசாரணையின்போது, ஹேம்நாத் கூறியதாக சொல்லப்படுகிறது.

சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், சக நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடம், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னிடம் சித்ரா பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்த புகாரை ரவிச்சந்திரன் மறுத்தார்.

சித்ரா ஒரு சினிமா பிரபலம் என்பதால், அவர் சார்ந்த அனைவரையும் விசாரிக்காமல் தங்கள் தரப்பை மட்டுமே விசாரிப்பதாக, ஹேம்நாத் தந்தையின் வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments