வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது சி.எம்.எஸ் -01 செயற்கைகோள்..!

0 5221
தகவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-01 செயற்கை கோளை, இஸ்ரோ வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

தகவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-01 செயற்கை கோளை, இஸ்ரோ வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, இந்த ஆண்டில் 2வது முறையாக செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 25 மணி நேர கவுண்ட் டவுன் முடிந்ததை அடுத்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட், சிஎம்எஸ்-01 என்ற தகவல் தொடர்பு சேவைக்கான செயற்கை கோளை சுமந்தபடி, பிற்பகல் 3.41 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.

சரியாக 20 நிமிடத்திற்குப் பின் செயற்கை கோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், செயற்கை கோள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

அடுத்த 4 நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் செயற்கை கோள் நிலை நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்திலும்,விஞ்ஞானிகள் குழுவினர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்தார். 

தற்போது ஏவப்பட்டிருப்பது பிஎஸ்எல்வி வரிசையில் 52வது ராக்கெட் ஆகும். ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட சிஎம்எஸ்-01, இந்தியாவின் 42ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள்.

ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் 7 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை, இண்டர்நெட், தொலைநிலைக் கல்வி, டெலிமெடிசின் உள்ளிட்ட சேவைகளுக்கு இந்த செயற்கைகோள் பயன்படும்.

இந்திய நிலப்பரப்பு, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகளில் மேம்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் சி பேண்ட் அலைவரிசை சேவைக்காக செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புவி கண்காணிப்பு செயற்கை கோளை இஸ்ரோ செலுத்திய நிலையில், 2வதாக தகவல் தொடர்பு செயற்கை கோள் தற்போது ஏவப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments