திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தின் கீழ் தோண்டிய ஆற்றுமணல் கடத்தல்.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!

திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலையத்தின் கீழ் தோண்டிப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணலைக் கடத்தியது தொடர்பாகப் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாகக் கட்டடம் கட்ட 30 அடி ஆழத்துக்குத் தோண்டப்பட்டது. இந்த இடம் தாமிரபரணி ஆற்றுப் படுகை என்பதால் தோண்டியதில் பெருமளவு ஆற்றுமணல் கிடைத்ததாகவும், அதை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான மனுவில், முறைகேடு வெளியே தெரிந்தபின் மாநகராட்சி அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களின் உடந்தையோடு குறைந்த மதிப்பில் மணலை ஏலம் விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், பேருந்து நிலையப் பகுதியில் தோண்டியதில் 90 விழுக்காடு ஆற்று மணல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மணல் கடத்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன? பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை என்ன? என அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Comments