வாகன நிறுத்துமிடத்தை அறிய பிரத்யேக செயலி.. போக்குவரத்து காவல்துறை தகவல்..!

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வாகன நிறுத்துமிடங்கள் எங்குள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ள பிரத்யேக ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை குறைக்க "Zero violation junction" எனும் விதிமீறல் இல்லா சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா நினைவு வளைவு சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய 4 சிக்னல்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இந்த வாரம் முழுவதும் போலீசார் அந்தந்த சிக்னல்களில் ஸ்டாப்லைன் எனப்படும் வெள்ளை நிற கோட்டை தாண்டி வரும் வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், கார்களில் சீட் பெல்ட் போடாமல் வருவோர் உள்ளிட்டோரை கண்டுபிடித்து அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி அறிவுரை வழங்குவார்கள்.
பிறகு அடுத்த வாரத்திலிருந்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர். இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் எனவும், அதனால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறையும் எனவும் நம்புவதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பது சாலையோரம் ஆக்கிரமித்திற்கும் வாகனங்கள் தான். குறிப்பாக வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டண பார்க்கிங் மற்றும் கட்டணமில்லா பார்க்கிங்கை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் பார்க்கிங் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து காவல் துறை ஈடுபட்டுள்ளது. இதேபோல் பார்க்கிங் பகுதிகள் எங்குள்ளன, அங்கு எப்படி செல்வது என்பதை அறிந்து கொள்ள பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Comments