சென்னையில் போக்குவரத்து விதிமீறலைக் குறைக்க புதிய உத்தி

சென்னையில் போக்குவரத்து விதிமீறலை குறைக்க "Zero violation junction" எனும் விதிமீறல் இல்லா சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து மீறல்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது, சிக்னல் ஜம்பிங், வெள்ளைக் கோட்டை தாண்டி வந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றைத் தடுக்க சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் விதிமீறல் இல்லா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா நினைவு வளைவு சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். தற்போது அடுத்தக்கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அனைத்து இடங்களிலும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது. போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள சந்திப்புகளில் நிபந்தனையின்றி உடனடியாக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இந்த திட்டம் பற்றி போலீசார் அறிவுரைகளை வழங்குவார்கள்.
ஒரே நபர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் போது அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments