கோரிக்கைகளைப் பேசித் தீர்க்க விவசாய சங்கப் பிரதிநிதிகள்-அரசுப் பிரதிநிதிகள் குழுவை அமைக்க வேண்டும்:உச்சநீதிமன்றம் விருப்பம்

விவசாயிகளின் கோரிக்கைகளைப் பேசித் தீர்க்க விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என விரும்புவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் சாலைகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்றக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது டெல்லி சாகீன்பாக்கில் சாலையை மறித்துப் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் முந்தைய நிகழ்வுகளை எடுத்துக் காட்ட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனு தொடர்பாகப் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். விவசாயிகள் பிரச்சனை தேசிய அளவிலான பிரச்சனையாக மாறும் என்பதால், அவர்களின் கோரிக்கைகளைப் பேசித் தீர்க்க விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டதுடன் விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தனர்.
Comments