பாகிஸ்தானுடன் போரில் வெற்றி... 50ஆண்டுக் கொண்டாட்டம்

0 1541
பாகிஸ்தானுடன் போரில் வெற்றி... 50ஆண்டுக் கொண்டாட்டம்

பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதன் ஐம்பதாண்டு நிறைவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில் வன்முறையைக் கட்டவிழ்த்ததை அடுத்து இந்தியப் படையினர் கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாகத் தலையிட்டுப் போர் புரிந்தனர். 1971 டிசம்பர் மூன்றாம் நாள் தொடங்கிய போர் பாகிஸ்தான் படையினர் நிபந்தனையின்றிச் சரணடைந்ததை அடுத்து டிசம்பர் 16ஆம் நாள் முடிவடைந்தது.

இதையடுத்துக் கிழக்குப் பாகிஸ்தான் விடுதலையடைந்து வங்கதேசமாக உருவெடுத்தது. இந்தப் போரில் இந்தியா வென்றதன் ஐம்பதாண்டு நிறைவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வெற்றிச் சுடரை எடுத்த பிரதமர் அதை நான்கு தீபங்களில் ஏற்றி வைத்தார். இந்த வெற்றித் தீபங்கள், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்று விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படும்.

பாகிஸ்தானுடனான போரில் வென்றதன் ஐம்பதாண்டு நிறைவையொட்டி அதற்கான அடையாளச் சின்னத்தைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விமானப்படை விமானங்களின் சாகசக் காட்சியும் இடம்பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments