டெல்லியில் 21வது நாளாக தொடரும் போராட்டம்... விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 21வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
வேளாண்சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டி போன்ற அம்சங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், 21வது நாளாக டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி-நொய்டா சாலையை அடைத்து இன்று மீண்டும் மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
அதேசமயம், விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வோம் எனவும் அவர் உறுதியளித்தார்.
அதைதொடர்ந்து, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Comments