இனித்தால் கவிதை எழுதும்..! கசந்தால் கையை வெட்டும்..! ஆதலால் காதல் செய்வீர்

0 7682
இனித்தால் கவிதை எழுதும்..! கசந்தால் கையை வெட்டும்..! ஆதலால் காதல் செய்வீர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கோபித்துக் கொண்டு, தாய் வீட்டில் இருந்து வர மறுத்த மனைவியின் கையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலிக்கும் போது கவிதை எழுதிய காதலன், காதல் கசந்ததால் காதல் மனைவியின் கையை வெட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சேத்தியாதோப்பு ஆணைவாரி நல்லதண்ணிகுளத்தைச் சேர்ந்தவர் மீன்வியாபாரி சஞ்சய்காந்தி.

10 வருடங்களுக்கு முன்பு இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக இருந்த போது, தனது பேருந்தில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த சத்தியவதி என்பவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் குடும்ப சூழ்நிலையால் பேருந்து நடத்துனர் வேலையை விட்டு மீன் வியாபாரத்திற்கு தாவினார் சஞ்சய் காந்தி. தினமும் காதல் மனைவியின் நடத்தையில் மீது சந்தேகப்பட்டு அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியவதி, தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு விருத்தாசலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு வருடமாக அங்கு வசித்துவந்த நிலையில், தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் நோக்கில் அங்கு சென்ற சஞ்சய் காந்தி, மனைவி சத்தியவதியை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். அதற்கு சத்தியவதி உடன்படாததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் காந்தி, தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் மனைவியின் கை மற்றும் தலைபகுதியில் வெட்டினார். வலிதாங்க முடியாமல் சத்தியவதி தப்பி ஓடினார். இருந்தும் விடாமல் துரத்திச்சென்று வெட்டியதில் ஒரு கை துண்டானது..! இதையடுத்து சஞ்சய் காந்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சத்தியவதியை மீட்ட அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருத்தாசலம் காவல்துறையினர் தலைமறைவான சஞ்சய் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து ரசித்து காதலித்த காலத்தில் காதலிக்கு கவிதைகளுடன் காதல் கடிதம் எழுதிய கைகள், இன்று திருமணம் செய்த மனைவியின் காதல் கசந்ததால் கையை வெட்டி துண்டாக்கி இருப்பது தான் காதல் திருமணத்தின் சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments