கன்னியாகுமரி : குழந்தை இல்லாத ஏக்கம்... காதல் திருமணம் செய்த தம்பதி எடுத்த விபரீத முடிவு!

நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகாவைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்துவருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கரிசூல்தால் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, காதல் தம்பதியர் குமரி மாவட்டம், கோட்டார் பகுதியில் உள்ள பைத்துல்மால் நகர் பகுதியில் வசித்து வந்தனர். காதல் தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தாலும், இவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை.
அதனால், குழந்தை பாக்கியம் வேண்டிப் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனாலும், குழந்தை பிறக்காததால் இருவரும் சமீப காலமாகவே மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போலத் தூங்கச் சென்ற கணவன் - மனைவி விடிந்து வெகுநேரம் ஆகியும் கதவைத் திறக்கவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தம்பதியர் இருவரும் படுத்த படுக்கையிலேயே இறந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகே கிடந்த விஷ பாட்டில்கள் மூலம் இருவரும் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் கோட்டாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தை இல்லாத துயரில், காதலித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments