சென்னை ஐஐடி பாதிப்பு எதிரொலி: உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை..!

சென்னை ஐஐடி-யில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடர்வது குறித்து உயர்கல்வித்துறை நாளை முடிவு செய்ய உள்ளது.
தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, விடுதிகளும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டு, அங்கு விடுதிகள் மற்றும் வகுப்பறைகள் காலவரையின்றி மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சென்னை ஐஐடி-யில் 539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 79 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடி-யை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் விடுதியில் தங்கியுள்ள 700 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் நான்கு குழுக்கள் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பரிசோதனை மாதிரிகளை சேகரித்தனர்.
சென்னை பல்கலைக்கழகத்திலும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமணி வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு பரிசோதனை நிறைவடைந்து விட்டதாகவும், கிண்டி மற்றும் மெரீனா வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
இதேபோல, பிற உயர்கல்வி நிறுவனங்களும், நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. அதேசமயம், நேரடி வகுப்புகளை தொடர்வதா வேண்டாமா என்பது தொடர்பாக உயர்கல்வித்துறை நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments