5ஆவது நாளாக மழை..! 1,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

0 796
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 5ஆவது நாளாக தொடரும் மழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் 5ஆவது நாளாக தொடரும் மழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

சிதம்பரத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய மழை விடாமல் 5ஆவது நாளாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள கேஆர்எம் நகர், பூதகேணி, கனகசபை நகர், எம்கே தோட்டம், தெற்கிருப்பு, வடக்கிருப்பு உள்ளிட்ட 15 தெருக்களில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதேபோல் முருகன் கோயில் தெரு, சண்முகா நகர், இடையர் தோட்டம், அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் முட்டியளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

தாழ்வான பகுதிகள் என்பதால் அங்கு வசித்த மக்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடத்துக்கு ஏற்கெனவே வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் சிலர் மட்டும் வீடுகளை விட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர்.

பல்வேறு இடங்களில் தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரிலும், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரிலும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையம் கனமழை காரணமாக சுற்றிலும் நீர் சூழ்ந்து மூழ்கும் நிலையில் உள்ளது.

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்ப்டடிருந்த லாரிகள், கார்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கும் நிலையில் உள்ளன. காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களில் பணியமர்த்தப்பட்ட சூழ்நிலையில் சிலர் மட்டும் காவல்நிலைய பாதுகாப்பு பணியிலும், ஒரு சிலர் காவல்நிலையத்துக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மழைநீரை வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டு நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் 6 கால பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜன் கார்டன் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல இடுப்பளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் வெளியேற முடியாமல் தவித்ததால், படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது.

அங்குள்ள தனியார் பேருந்து நிறுவன அலுவலகத்துக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளநீரில் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் மிதந்து வருவதையும் அடிக்கடி காண முடிந்தது. பள்ளிபனையில் ஆற்றங்கரையோரம் உள்ள குடிசை வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே 50க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் ஒன்று மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. எடையார், பிள்ளையார் தாங்கல், நடுத்திட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த அந்தத் தரைப்பாலம் வழியே வாகனங்களை அனுமதிக்காமல் கயிறுகள் கட்டப்பட்டும் எச்சரிக்கைப் பலகைகள் நடப்பட்டும் உள்ளன. அப்பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments