தொடரும் கனமழை : பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின

0 1398
தொடரும் கனமழை : பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின

கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, செருதூர், பூவைத் தேடி, மேலப்பிடாகை, திருமணங்குடி, ஆழியூர்,சிக்கல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது.

காடம்பாடியில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் 10 ஆயிரம் டன் நெல் இருக்கும் நிலையில், மழைநீர் தேங்குவதால், நெல் மூட்டைகளின் அடிப்பகுதி சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மழைநீரை வடியவைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓடம் போக்கி ஆற்று நீர் பாசனத்தால் 300 ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், தற்போது விளை நிலங்களில் இடுப்பளவு வரை நீர் தேங்கியதால், பயிர்கள் அழுகி நாசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தில் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் ராதாநல்லூர் ஆற்காடு குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 3 வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீருக்குள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் அருகே மழையால் பாதித்த இடங்களை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நேரில் பார்வையிட்டார்.

அப்பொழுது தாழ்வான இடங்களில் தங்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

இதேபோல் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் கன மழையால் பாதித்த பகுதிகளை திருச்சி மண்டல ஐஜி ஜெயராமன் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காக 1200 காவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த கீழ்பாலனந்தல் கிராமத்தில் உள்ள தொன்னாந்தல் ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறியது.

இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments