ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை.. 1,500 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்!- மசாலா மன்னன் செய்த மாயாஜாலம்

0 134207
மறைந்த மசாலா உலகின் மன்னர் தரம்பால் குலாட்டி.

ஐந்தாம் வகுப்பு கூட தாண்டவில்லை. ஆனால், 1500 கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மசாலா உலகின் மன்னர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட தரம்பால் குலாட்டி மரணமடைந்தார். 


பாகிஸ்தானின் சியால்கோட்டில் 1923 மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார் குலாட்டி.  அவரது தந்தை மஹாஷாய் சுனிலால் குலாட்டி (Mahashay Chunni Lal Gulati) 1919- ஆம் ஆண்டிலிருந்து சியால்கோட்டில் ஒரு மசாலா நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்து நாடு பிரிக்கப்பட்ட போது, இந்தியா மேல் உள்ள பற்றால் குலாட்டியின் குடும்பம் இந்தியாவிற்கு குடி பெயர்ந்தது.சியால் கோட்டில் நடத்தி கொண்டிருந்த மசாலா பிசினஸை கை விட்டு, அவரது குடும்பம் இந்தியாவிற்கு வந்து அமிர்தரஸ் நகரில் உள்ள  அகதிகள் முகாமில் தங்கியது. பிறகு, டெல்லிக்கு குடி பெயர்ந்தது. 

தரம்பால் குலாட்டி முதலில் டெல்லியில்  கரோல் பாக் நகரில் ஒரு மசாலா கடையைத் திறந்தார். சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட  அந்த கடையில் விற்பனை சிறப்பாக நடக்கவே 1953 ஆம் ஆண்டில், சாந்தினி சவுக்கில் இரண்டாவது கடையை தொடங்கினார். இப்படித்தான் இந்தியாவில் அவரின் மசாலா பிசினஸ் தொடங்கியது. பிறகு, எம்டிஎச் என்று அழைக்கப்பட்ட  மகாஷியன் டி ஹட்டி நிறுவனத்தின் மசாலா பொருட்களை தயாரிப்பதற்காக 1959 ஆம் ஆண்டில், புது டில்லியில் தனி தொழிற்சாலை ஆரம்பித்தார்.  அதற்கு பிறகு மனிதர் திரும்பி பார்க்கவே இல்லை. புதிய புதிய மசாலா தயாரிப்பு தொழிற்சாலைகளை தொடங்கிக் கொண்டெ சென்றார்.  15 தொழிற்சாலைகளுடன்  எம்டிஎச்   இந்தியாவின் முன்னனி மசாலா நிறுவனமாக மாறியது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1,500 கோடி ஆகும். 

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, குலாட்டி இந்தியாவிலேயே  நுகர்வோர் பொருட்கள் சந்தையில் அதிக சம்பளம் வாங்கும்  தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். கடந்த நிதியாண்டில் மட்டும் அவரது  சம்பளம் 21 கோடி ரூபாயாக இருந்தது. குலாட்டி, கிட்டத்தட்ட தனது 90 சதவீத சம்பளத்தை மகாஷய் சுன்னி லால் என்ற அறக்கட்டளை மூலம் பல சமுக சேவைகளுக்கும் தொண்டுகளுக்கும் பயன்படுத்தி வந்தார். இந்த அறக்கட்டளை டெல்லியில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும், குடிசைவாசிகளுக்கான நடமாடும் மருத்துவமனையையும் மற்றும் பல பள்ளிகளையும் நடத்தி வருகிறது.

மஹாஷாய்ஜி  என்று மரியாதையாக அழைக்கப்படும்  தரம்பால் குலாட்டிக்கு 2019 ஆம் ஆண்டில், நாட்டின்  மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments