புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை

புரெவிப் புயல் காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுக் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
திருத்துறைப்பூண்டியில் 13 சென்டிமீட்டரும், குடவாசலில் 10 சென்டிமீட்டரும், திருவாரூரில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் இலேசான மழை பெய்து வருகிறது.
மழைநீர் பெருக்கெடுத்துக் குளம் குட்டைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாததால் படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Comments